பாடசாலை வரலாறு

கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம்  என்னும் பகுதியில் தி/ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்து பிரமுகர்களின் சிந்தனையின் விளைவாக இப்பிரதேசத்திற்கு பாடசாலையின் தேவை உணரப்பட்டது. அனைவருடைய பங்களிப்போடும் 1918இல் ஓலை கொட்டிலில் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப்பாடசாலைக்குரிய  காணியினை ஆதிகோணநாதர் ஆலய அறங்காவலர் சபையினர் மனமுவந்து வழங்கி வைத்தனர். 1918இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தம்பலகாமம் ஆரம்பப்பாடசாலை என்னும் நாமம் தாங்கி கால ஓட்டத்தில் தம்பலகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்னும் பெயரோடு 1956-1975 வரை சிறப்பாக இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து 1958 முதல் மகா வித்தியாலயம் என்னும் பெயரில் கல்விப் பணியும் சமூகப் பணியும் மேற்கொண்டு வந்தது. 1961-1963 வரையான காலப்பகுதியில் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் அரசு சுவீகாரம் செய்ய முன் வந்தது. நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு வந்த போதும் அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. அக்காலப் பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பாடசாலை சுவீகரிப்பை வர்த்தமானி மூலம் வெளியிட்டனர்.  அதன் பிரகாரம் தம்பலகாமம்  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையான எமது பாடசாலை தம்பலகாமம் மகா வித்தியாலயம் எனும் புதிய நாமம் பெற்றது. 1981ல் க.பொ.த  உயர் தர கலை விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் தமிழ் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் இணைந்து கல்வி கற்றனர். 1990-1996  வரையான காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தி/ஆதிகோணேஸ்வாரா மகா வித்தியாலயம் எனும் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. 2000ம்  ஆண்டில் முதன் முறையாக உயர்தர வர்த்தகப் பிரிவு  ஆரம்பிக்கப்பட்டது. காலத்திற்கு காலம் புதிய செயற்திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டதால் பாடசாலை செயற்பாடுகளிலும் பெருமாற்றங்கள் அடைந்து 2012ல் ஆயிரம் பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ள வாங்கப்பட்டதால் ஆரம்பப்பிரிவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர் தொகையில் சரிவு ஏற்பட்டது. இப்பிரதேசத்தின் தாய் பாடசாலையாகவும் பல்வேறு வளங்களை கொண்ட பாடசாலையாகவும் இன்றும் தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளது .